மே.3
தமிழகத்தில் மூத்த அமைச்சர்கள் பொதுவெளியில் பேசும்போது விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையிலான பேச்சுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வரும் 7ஆம் தேதியுடன் 2 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்கிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். அப்போது, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதனை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கலைஞர் நூற்றாண்டு விழா ஏற்பாடுக,ள சென்னை, திருவாரூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க குடியரசுத் தலைவர் வருகை, அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
தொடர்ந்து, அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் மூத்த அமைச்சர்கள் பேசும் சர்ச்சைப் பேச்சுகளும், அதனால் எழும் விமர்சனங்களும் வருத்தம் அளிக்கிறது எனத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விமர்சனத்திற்கு ஆளாகும் வண்ணம் பேசுவதை மூத்த அமைச்சர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்றும், இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியும் மூத்த அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாகவும் அவர் கவலை தெரிவித்த முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.