மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைந்தால், மெரினா கடற்கரை என்ற அடையாளம் போய் பேனா கடற்கரை என மாறிவிடும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை மெரினா கடலுக்கு நடுவே ரூ.81 கோடி செலவில் ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் அமைக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசின் அனுமதிக்காக தமிழக அரசு விண்ணப்பித்திருந்தது. மத்திய சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறை ஆகியவற்றிடமும் அனுமதி கோரியிருந்தது. இந்த நிலையில் சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்திருக்கிறது. ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக கூட்டத்தில் இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் பிறந்த நாளான வரும் ஜூன் 3-ம் தேதி, பேனா நினைவுச் சின்னத்துக்கு அடிக்கல்நாட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை ஓட்டேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: மெரினா கடற்கரை உலக பிரசித்தி பெற்றது. உலகிலே மிகப்பெரிய நீளமான 2-வது கடற்கரை. மெரினா கடற்கரை ஒரு அடையாள சின்னம். கடலில் பேனா சின்னம் அமைப்பதால் சுற்றுசூழல் பாதிக்கப்படும். மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். பேனா நினைவு சின்னம் அமைந்தால், மெரினா என்ற அடையாளம் போய் பேனா கடற்கரை என மாறிவிடும். தானியங்கி எந்திரம் மூலம் மது வழங்கும் திட்டத்தை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு கூறினார்.