ஜுலை,24-சென்னையில் குறிப்பிட்ட சில கல்லூரி மாணவர்களால் ஏற்படும் பிரச்சினை போலிசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது என்ற புகார் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவர்களில் சிலருக்கு பாடம் கற்றுக்கொடுக்க விரும்பிய போலிசார். மாநகர பேருந்து மீது ஏறி ஆட்டம் போட்ட மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி உள்ளனர்.
சென்னை எண்ணூரில் இருந்து வள்ளலார் நகருக்கான தடம் எண் 56A பேருந்து திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது தியாகராஜா கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் பேருந்து மீது ஏரியும், பேருந்தை சாலையிலே நிறுத்தியும் செய்த அட்டூழியங்கள் போக்குவரத்தை முடக்கிவிட்டது.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை அடுத்து வண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீசார் தியாகராஜா கல்லூரி முதல்வர் உதவியோடு அந்த கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேரை அடையாளங் கண்டு காவல் நிலையத்தை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அவர்களும் இனி இது போன்ற செயலில் ஈடுபட மாட்டோம் என மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தனர்.இது போன்ற சம்பவம் தொடர்ந்தால் நிச்சயம் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் அவர்களை போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
மேலும் நான்கு பேரும் பேசின்பிரிட்ஜ் சந்திப்பில் போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்று துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி உத்தரவிட்டார். அதன் பேரில் மாணவர்கள் திங்கள் கிழமையான இன்று காலை பேஷன் பாலம் சந்திப்புக்கு வந்து போக்குவரத்து போலிசாரின் வழிகாட்டுதல் பேரில் போக்குவரத்தை சரி செய்தனர். அந்த வழியே சென்ற அனைவரும் இதை வேடிக்கையாக பார்த்து விட்டுச் சென்றனர்.
000