ஜுலை, 18-
அமைச்சர் பொன்முடியை அமலக்கத்துறை அலுலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரை அதரிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவர் தமது மகன் கவுதம் சிகாமணியுடன் இன்று மாலை 4 மணிக்கு அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படக்கூடும் என்ற பரபரப்பு ஓய்ந்திருக்கிறது.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் நேற்று ( திங்கள் கிழமை) காலை 7 மணி அளவில் ஆரம்பமான சோதனை இரவு எட்டு மணி வரை 11 மணி நேரம் நீடித்தது. இந்த சோதனையின் போது அவருடைய வீட்டில் சுமார் 70 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய பவுண்டு மற்றும் அமெரிக்க டாலர்களும் கிடைத்தன.
அமலாக்கத் துறை சோதனைக்காக காலை 7 மணிக்கு வந்த போது வீட்டில் பொன்முடி, மனைவி, மருமகள் ஆகியோர் இருந்தனர். வீட்டில் நுழைந்த உடன் அதிகாரிகள் பொன்முடி உள்ளிட்டோரின் செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டனர்
அதன் பிறகு ஒவ்வொரு இடமாக சோதனை தொடங்கியது. பொன்முடி மற்றும் அவருடைய குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்வதற்கு வங்கிகளில் இருந்து அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். அவர்கள் வங்கிகள் மூலமாக பொன்முடி குடும்பத்தார் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை விளக்கினார்கள். மேலும் சில ஆவணங்களில் உள்ள கையெழுத்துகள் பொன்முடி உடையதா என்பதை உறுதி செய்வதற்கு தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
மேலும் பொன்முடியின் காரில் சில முக்கியமான ஆவணங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவருடைய காரை திறந்து அங்கிருந்த கட்டுக்கட்டான ஆவணங்களை வீட்டுக்குள் அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
பொன்முடி வீடு மட்டுமின்றி அவருடைய மகனும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கொளதம் சிகாமணியின் விழுப்புரம் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அந்த வீட்டில் 2 பீரோக்களை அதற்கான சாவிகளை அதிகாரிகள் வாங்கி திறந்து சோதனை நடத்தினார்கள்.மற்றொரு லாக்கரை மட்டும் திறக்க முடியவில்லை. மாற்று சாவி தயாரிக்கும் தனபால் என்பவரை அழைத்து வந்து திறந்துப் பார்த்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள சூர்யா பொறியியல் கல்லூரி, சென்னை கே.கே.நகரில் அவருடைய இளைய மகன் அசோக் சிகாமணியின் மருத்துவமனை ஆகிய இடங்களும் சோதனைக்கு ஆளானது
அமைச்சர் பொன்முடி இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத் துறை சோதனைக்கு காரணமான வழக்கு செம்மண் குவாரி வழக்காகும். ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி பொன்முடி மகன் கவுதம சிகாமணி அண்மையில் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனால் நீதிமன்றம் அவரை விடுவிக்க மறுத்து, வழக்கை தொடர்ந்து நடத்தும் படி மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. செம்மண் குவாரிகளில் இருந்து அளவுக்கு அதிகமாக மண் எடுத்த விவகாரத்தில் சட்ட விரோத பணப் பறிமாற்றம் நடைபெற்று இருக்கலாம் என்று அமலாக்கத் துறை சோதனை நடத்தி உள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் பாதுகாப்புக்க மத்திய ரிசர்வ் போலிசாரை அழைத்து வந்திருந்தனர். சோதனை நடைபெறும் தகவல் பரவியதும் திமுகவினர் பொன்முடி வீட்டின் முன் கூடினர்கள். கரூரில் கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையின் போது அதிகாரிகள் சிலர் திமுகவினரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதனால் பொன்முடி வீட்டு சோதனையில் பாதுகாப்பு பலமாகவே இருந்தது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது. அதன் பிறகு பொன்முடியை அவருடைய காரிலேயே அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இதனால் அவர் கைது செய்யப்படக்கூடும் என்ற தகவல் பரவியது
அமலாக்கத் துறை அலுவலகத்தில் பொன்முடியிடம் இரவு 9 மணிக்கு தொடங்கிய விசாரணை அதிகாலை 3 மணி வரை நீடித்தது. இந்த விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல் காரணமாக அவரைச் சார்ந்தவர்கள் பதற்றத்தோடு நின்று கொண்டிருந்தனர்.
ஆனால் அவரை அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்குப் போகுமாறு சொன்ன அதிகாரிகள் இன்று மாலை 4 மணிக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளனர். அவருடன் மகன் கொளதம சிகாமணியும் வரவேண்டும் என்பதும் அதிகாரிகளின் உத்தரவாகும்.
000