கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால், சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்தன.
பொள்ளாச்சி அருகே உள்ள ராசக்காபாளையத்தில் மோகன ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது. இந்த தொழிற்சாலையில் தென்னை நார் உற்பத்தி செய்யப்பட்டு உரிய விலை கிடைக்காததால் டன் கணக்கில் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று உற்பத்தி செய்யப்பட்ட தென்னை நாரை உலர வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நாரின் ஒரு பகுதியில் இருந்து புகை வந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், புகையை கட்டுப்படுத்த செல்வதற்குள், தீயாக பரவி மளமளவென குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நார் முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது.
இந்த விபத்தில், டிராக்டர், தென்னை உற்பத்தி செய்யக் கூடிய இயந்திரம் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்தன. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான தென்னை நார் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.