பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் இளைஞர் ஒருவர், போக்குவரத்து காவலர்களை தகாத வார்த்தையால் திட்டி பணிசெய்ய விடாமல் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் வழக்கம் போல நகர போலீசார் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததை கண்ட போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த போதை இளைஞர் போக்குவரத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, போலீசாரை தகாத வார்த்தைகளில் திட்டிய இளைஞரை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் திகைத்து நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினர்.
செய்வதறியாது நின்ற போலீசார், இளைஞரை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால், அடங்காத போதை இளைஞரால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து, அந்த இளைஞரை காவல் வாகனத்தில் ஏற்றி, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.
அதில், அவர் பொள்ளாச்சி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. மாற்று திறனாளி என்பதால் அறிவுரை கூறி அந்த இளைஞரை போலீசார் அனுப்பி வைத்தனர்.