ஆகஸ்டு.30-
பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 327 கிலோ ஹெராயின், ஐந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்டாக்கள் கேரளா மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக தேசிய புலானாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். போதைப்பொருள், ஆயுதக்கடத்தலில் ஈடுபட்டதாக முன்னாள் ராணுவ வீரர் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.இவர் நடிகர்
சரத்குமார் மகள் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேனேஜர்
ஆவார்.
இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியானது. சில ஊடகங்களில் வரலட்சுமிக்கு போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானது .இதனை வரலட்சுமி திட்டவட்டமாக
மறுத்துள்ளார்.
இது குறித்து நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை: ’’தற்போது நடக்கும் சம்பவங்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டியது முக்கியம் என நினைக்கிறேன். ஆதிலிங்கம் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை எனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக வரும் செய்திகள் பொய்யானவை. உண்மை தன்மையற்றவை. அப்படியான எந்த சம்மனும்
எனக்கு அனுப்பப்படவில்லை. நேரில் ஆஜராக வேண்டும் என்ற எந்த கோரிக்கையும் வரவில்லை. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ரிலான்ஸ் மேலாளராக ஆதிலிங்கம் என்னிடம் பணியாற்றினார்.
இந்தக்காலக்கட்டத்தில் நான் மேலும் பல ப்ரீலான்ஸர்களுடன் ஒரேநேரத்தில் பணியாற்றினேன். பணியில் இருந்து ஆதிலிங்கம் சென்ற பின்பு இன்றுவரை அவருடன் எந்த பேச்சுவார்த்தையும் நான் வைத்துகொள்ளவில்லை. செய்திகளை நான் பார்க்கும்போது அதிர்ச்சியடைந்தேன். எவ்வாறாயினும் அரசுக்கு உதவுவதில் எனக்கு சந்தோஷம் தான்’’என விளக்கம் கொடுத்துள்ளார்.
வரலட்சுமி, தன்னிலை விளக்கம் அளித்தாலும், என்.ஐ.ஏ.விளக்கம் அளித்தால் தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும்.
000