மே.31
மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, மல்யுத்த வீராங்கனைககள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கங்கை நதியில் பதக்கங்களை வீசும் போராட்டத்தை விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தற்காலிமாக கைவிட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், தங்களிடம் பாலியல் ரீதியில் அத்துமீறி செயல்பட்டதாக சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த 28ம் தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றபோது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்கள் போராடி வந்த இடத்தையும் அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து, நாட்டிற்காக விளையாடி தாங்கள் பெற்ற பதக்கங்கள் அனைத்தையும் கங்கையில் வீசுவதாக அறிவித்தனர். அதன்படி, நேற்று அவர்கள் ஹரத்துவார் சென்றனர். அப்போது, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.
இதையடுத்து, மல்யுத்த வீரர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் நரேஷ் திகாயித், குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு 5 நாட்கள் அவகாசம் கொடுங்கள் என்று கூறி, அவர்களிடமிருந்து பதக்கங்களை வாங்கினார். இதையடுத்து, மல்யுத்த வீராங்கனைகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.