வானொலி வாயிலாக ஒலிபரப்பாகும் பிரதமர் மோடியின் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் 100-வது பகுதி வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.
இதையொட்டி டெல்லியில், ‘மன் கி பாத்-100′ என்ற மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாலிவுட் நடிகர் ஆமிர் கான், நடிகை ரவீணா டாண்டன், விளையாட்டு வீராங்கனைகள் தீபா மாலிக், நிகத் ஜரீன், பத்திரிகையாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்நிகழ்ச்சியின்போது நடிகர் ஆமிர் கான் கூறியதாவது: நாட்டின் தலைவர் மக்களுடன் உரையாடுவது, பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது, யோசனைகளை முன்வைப்பது, ஆலோசனைகளை வழங்குவது என்பது மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி 100-வது அத்தியாயத்தை நிறைவு செய்துள்ளதில் மகிழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்வேகம் அளித்து வருகிறார். இவ்வாறு நடிகர் ஆமிர்கான் கூறினார்.