டிசம்பர்-29,
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்காக பாகிஸ்தானில் உள்ள அவருடைய சொந்த ஊரில் அஞ்சலி செலுத்தி அவருடைய பள்ளிப் பருவத்தை நினைவு கூர்ந்து உள்ளனர்.
காஹ் கிராமத்தைச் சேர்ந்த அல்தாஃப் ஹுசைன் “ஒட்டுமொத்த கிராமமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இன்று எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டதாக நாங்கள் உணர்கிறோம், ”என்று கூறினார். உள்ளூர்வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் கிராமத்தில் பிறந்து இந்திய பிரதமா் என்ற உயரிய இடத்தை அடைந்த மன்மோகனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிப்பதற்கு நேற்று ஒரு கூட்டத்தை நடத்தினார்கள்.
டாக்டர். மன்மோகன் சிங் 4 -ஆம் வகுப்பு வரை படித்த காஹ் கிராமத்தில் உள்ள அதே பள்ளியில் அல்தாஃப் ஹுசைன் ஆசிரியராக உள்ளார்.
மன்மோகன் சிங்கின் தந்தை குர்முக் சிங் துணி வியாபாரி, அவரது தாயார் அம்ரத் கவுர் ஒரு இல்லத்தரசி. நண்பர்கள் அவரை சிறு வயதில் ‘மோகனா’ என்று அழைத்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து தென்மேற்கே 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம் டாக்டர் மன்மோகன் சிங் பிறந்தபோது ஜீலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இஸ்லாமாபாத்தை லாகூருடன் இணைக்கும் M-2 நெடுஞ் சாலையிலிருந்தும், சக்வால் நகரத்திலிருந்தும் பசுமையான வயல்களால் சூழப்பட்ட காஹ் கிராமத்தை அடையலாம்.
கிராமத்தைச் சேர்ந்த ராஜா முகமது அலியின் மருமகன் ராஜா ஆஷிக் அலி என்பவர் 2008- இல் டெல்லிக்குச் சென்று மன்மோகனை சந்தித்து உள்ளார். அவர் “காஹ் கிராமவாசிகள் அனைவரும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியாவில் அவரது இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள அனவைரும் ஆர்வமாக இருந்தனர், ஆனால் அது சாத்தியமில்லை. எனவே, இரங்கல் கூட்டம் நடத்தி துக்கம் அனுசரிக்கிறோம்,” என்றார்.
மன்மோகச் சிங்கின் வகுப்பு தோழர்கள் இப்போது இறந்துவிட்டனர். ஆனால் அவர்களது குடும்பங்கள் இன்னும் காஹ் கிராமத்தில் வாழ்கின்றன. “எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் இந்தியாவின் பிரதமரானதைக் கிராமத்தில் உள்ள அனைவரும் பெருமையாக உணர்ந்த நாட்களை நினைத்து நாங்கள் இன்னும் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்” என்று திரு. ஆஷிக் அலி கூறினார்.
டாக்டர் மன்மோகன் சிங் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற பள்ளிதான் கிராமத்தின் முக்கிய இடமாக விளங்குகிறது. அவரது சேர்க்கை எண் 187, மற்றும் சேர்க்கை தேதி ஏப்ரல் 17, 1937. அவரது பிறந்த தேதி பிப்ரவரி 4, 1932, அவரது சாதி ‘கோலி’ என்று பள்ளி ஆவணங்களில் உள்ளது.
இந்தியப் பிரிவினையின் போது பஞ்சாப் மாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது மன்மோகன் சிங் பிறந்த கஹ் கிராமம் பாகிஸ்தானில் இடம் பெற்றுவிட்டது. அவருடைய பெற்றோர் இந்தியாவுக்கு வந்துவிட்டனர்.
***