ஜுலை,26-
கலைச்சேவை செய்வதற்காக கோடம்பாக்கத்தில் இருந்து அடிக்கடி பெரிய நட்சத்திரங்கள் மலேஷியா செல்வது வழக்கம்.அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும் தொழில் அதிபர், கைது செய்யப்பட்டுள்ளதால் தமிழ் நடிகர்- நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
போலீசில் சிக்கியுள்ள வர்த்தகர் பெயர் அப்துல் மாலிக் தஸ்கீர்.அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மீம்சல். சின்ன வயதிலேயே மலேஷிய சென்ற மாலிக், துணிக்கடையில் சாதாரண சிப்பந்தியாக வாழ்க்கையை ஆரம்பித்தார். அங்கு பெரிய நட்பு வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டு வளர்ந்த மாலிக் இன்று மிகப்பெரும் வர்த்தகர். வைர, தங்க நகைகள் வியாபாரம் செய்கிறார்.
திரைப்பட விநியோகம், தயாரிப்பு என சினிமாவிலும் கால் பதித்தார்.இதனால் ஏற்பட்ட அறிமுகத்தால் தமிழ் சினிமா நடிகர்கள்- நடிகைகளை மலேஷியா அழைத்து சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்.இதன் மூலமும் பெரும் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
நடிகைகளை தனி விமானத்தில் அழைத்து செல்வது , மலேஷியாவில் அவர்களை நட்சத்திர ஓட்டலில் தங்க வைப்பது என உபசரிப்புக்கு பேர் போன அவரை இப்போது மலேஷியாவில் டத்தோ மாலிக் என அழைக்கிறார்கள். அவரை நம்மூர் நட்சத்திரங்கள் ‘முதலாளி’ என அழைப்பது வழக்கம்.
ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தை மலாய் மொழி பேசச்செய்து, விநியோகம் செய்ததன் மூலம் மேலும் பிரபலமானார். சட்ட விரோத பண பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்ததாக மாலிக்கை மலேஷிய ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.
மாலிக் கைது தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.நடிகர்-நடிகைகள் மிரண்டுள்ளனர்.
000