மாணவி விவரத்தை கசியவிட்டது யார் ? சென்னை போலீசுக்கு நீதிபதிகள் கேள்வி.

 

டிசம்பர்-27.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது.இது தொடர்பாக நாளை விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளதால் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது..

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாணைக்கு மாற்றக் கோரும் மனுக்கள் மீது நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் வி லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

வழக்கறிஞர்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கடுமையான வாதங்களை முன் வைத்தனர்.

“மனுதாரர்கள் இரண்டு பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் வெளியிட்டது சட்டவிரோதம் என்றனர். மேலும் முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டதை காவல் ஆணையரே ஒப்புக் கொண்டுள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.”

“கைது செய்யப்பட்ட நபர் மீது 20 வழக்குகள் உள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். அவரின் பின்னணியில் இருப்பவர்கள் யார் , யார் என்பதை விசாரிக்க வேண்டும்.”

“பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படுகிற பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டப்பிரிவையும் மீறி முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, இடைக்காலமாக இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்”.

“கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக இந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு மட்டுமே உள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஆனால் பல வழக்குகள் உள்ளன. அவற்றையும் விசாரிக்க வேண்டும்” இவ்வாறு மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களை முன் வைத்தனர்.

வாதத்தின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், “புலன் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் ஒரு குற்றவாளி தான் என்று காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார்? கைது செய்யப்பட்டவர் காலில் பேண்டேஜ் போடப்பட்டுள்ளது ஏன் ?” என்று கேட்டார்கள்.

இதற்கு தமிழக அரசின் வழக்கறிஞர்கள் ” பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் பெயர் மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்று தான் காவல் ஆணையர் கூறியுள்ளார்.”

” மேலும் கைது செய்யப்பட்ட நபரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது அவர் தப்பி ஓட முயற்சித்ததார். அவரை காவல்துறையினர் விரட்டிச் சென்றபோது தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.” என்று விளக்கம் கொடுத்தனர்.

இதையடுத்து, ” அரசு அதிகாரிகள் நடத்தை விதிகளில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் முன் அரசு அனுமதி பெற வேண்டுமா? முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு யார் பொறுப்பு? போன்ற கேளவிகளுக்கு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் ” மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? நிர்பயா நிதி செலவு செய்யப்பட்ட விபரங்கள் குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும்? பல்கலைக்கழக விசாகா குழுவில் எத்தனை புகார்கள் வந்துள்ளன ? என்பது குறித்தும் அறிக்கை அளிக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு உள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக புகார் அளிக்க முன்வந்ததற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், அவரை பாதுகாக்க வேண்டியது நம் கடமை எனவும், குற்றவாளி 10 ஆண்டுகள் அண்ணா பல்கலை வளாகத்தில் உலவி வருகிறார். அதை விசாரித்தீர்களா ?என்றும் கேள்வி எழுப்பினார்கள்..

பெண்கள் ஆண்களுடன் பேச கூடாது, பாதிக்கப்பட்ட மாணவி அங்கு சென்றிருக்கக் கூடாது என்றெல்லாம் பேசக்கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. காதல் என்பது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம் என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள்.

இந்த வழக்கு மீது நாளையும் விசாரணை தொடர உள்ளது.

இதனிடையே அண்ணா பல்கலைக் கழக பலாத்கார வழக்கை சிபிஜ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
***

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *