உதயநிதி, வடிவேலு,ஃபகத்ஃபாசில் ஆகிய மூவரையும் சுற்றி பின்னப்பட்டுள்ள படம் மாமன்னன்.உதயநிதியே தயாரித்துள்ளார்.வசூலை அள்ளும் இந்தப்படம், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏன்?
பரிஏறும் பெருமாள் படத்தில் நெல்லை மாவட்டத்தில் நிலவும் ஜாதி பிரச்சினையை பேசி இருந்தார்.மாமன்னன் கதைக்களம், சேலம் மாவட்டம். அங்கு அரசியலில் நிலவும் ஜாதி ஏற்றத்தாழ்வுகளை, மாமன்னனில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் வரும் வடிவேலுவின் கேரக்டர், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை தலைவர் தனபாலின், அரசியல் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக பல தரப்பினரும் கோரசாக சொல்கிறார்கள். ஒப்பிட்டு பார்த்தால் உண்மை என்றே தோன்றுகிறது.
படக்கதை.
படக்கதையை முதலில் பார்த்து விட்டு பின்னர் தனபால் கதைக்கு செல்லலாம்.
சேலம் மாவட்டம் காசிபுரம் தனி (ரிசர்வ்) தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் மாமன்னன்( வடிவேலு).அவரது மகன் அதிவீரன்(உதயநிதி). மாமன்னன் சார்ந்துள்ள சமத்துவ சமூக நீதி மக்கள் கழக கட்சியின் மாவட்டச் செயலாளர் ரத்னவேலு ( ஃப்கத்ஃபாசில்).
ஆதிக்க ஜாதி உணர்வுடன் வலம் வரும் ரத்னவேலு, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.மாமன்னனை மதிப்பதில்லை. தனது எதிரே உட்காரவைப்பதில்லை. நின்றுகொண்டே இருக்க வேண்டும். மாவட்டச் செயலாளர் ரத்னவேலு வீட்டில் பஞ்சாயத்து ஒன்று நடக்கும் சூழலில் அவர் முன்பு மாமன்னன் உட்கார நேரிடுகிறது. இதனால் ஆத்திரம் கொள்ளும் ரத்னவேலு, மாமன்னனை தாக்குகிறார்.
அப்போது மாமன்னன் மகன் அதி வீரனுக்கும், ரத்னவேலுவுக்கும் இடையே ஏற்படும் பகை, கட்சிக்குள் விவகாரமாகிறது. இதனால் ஆளும்கட்சியில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் சேர்ந்து மாமன்னனை வீழ்த்த முயல்கிறார். அவர் ஜெயித்தாரா என்பது மிச்ச கதை . ஆதிக்கஜாதியால் அவமானப்படுத்தப்படும் மாமன்னன், சட்டப்பேரவை தலைவராக உயர்வதே கிளைமாக்ஸ்.
தனபாலின் கதை.
படத்தில் வரும் மாமன்னன் கேரக்டர், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் தனபாலின் நிஜ வாழ்க்கையோடு ஒத்துப்போவதாகவும் தனபாலின் கதையையே மாரி செல்வராஜ் படமாக எடுத்துள்ளதாகவும் ஆரம்பத்தில் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரவ விட்டனர்.
அந்த தகவல் நெருப்பாக பரவி, தனபாலின் உண்மை கதைதான் மாமன்னன் கதை என எல்லோரையும் நம்ப செய்து விட்டது. காரணம் ? தனபாலில் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள்.
தனபால் அட்டவணைப் பிரிவில் வரும் அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவர்.ஆரம்பத்தில் சேலம் மாவட்டம் சங்ககிரி தனித் தொகுதியில் இருந்து பலமுறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தார். ராசிபுரம் அப்போது பொதுத்தொகுதி. ( அங்கு எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கே.பி.ராமலிங்கம்)
பின்னாட்களில் ராசிபுரம் தனித்தொகுதியாக மாறியதும் அவரை அந்த தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளராக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா நிற்க வைத்தார். தனபால் எளிதாக ஜெயித்தார்.
’தனபால் கட்சிக்காரர்களை மதிப்பதில்லை.. வீட்டுக்குப்போனால் சாப்பாடு கூட தரமட்டார்’என அப்போது ஜெயலலிதாவுக்கு புகார்கள் போயின.
கோபமுற்ற ஜெயலலிதா, தனபாலை அழைத்து இது குறித்து கேட்டுள்ளார்.தனபால் அழாத குறையாக ‘’ அம்மா.நான் அருந்ததியர் ஜாதியை சேர்ந்தவர் என்பதால் யாரும் ( மேட்டுக்குடியினர்) என் வீட்டில் சாப்பிடமாட்டார்கள்’ என உண்மையை போட்டு உடைக்க, ஜெயலலிதா வெலவெலத்து போனார். தனபாலை உடனடியாக உணவு அமைச்சர் ஆக்கினார்.
பின்னர், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பேரவைக்குள் நுழைந்ததும், வணக்கம் செலுத்தும்படியான சட்டபேரவைத்தலைவராக தனபாலை அமர வைத்துஅழகு பார்த்தார்.இது தனபாலின் கதை.
நிஜத்துக்கும், நிழலுக்கும் பல்வேறு சம்பவங்கள் ஒத்துப்போவதால்,தனபால் கதையே மாமன்னன் கதை என்ற முடிவுக்கே வர நேரிடுகிறது.
அம்மாவுக்கு வெற்றி.
’மாமன்னன் கதை உங்கள் கதையாமே?’ என தனபாலிடம் சிலர் கேட்டபோது,’ மாமன்னன் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அம்மாவின் ( ஜெயலிலதா) தீவிரவிசுவாசி நான். அமைப்புச் செயலாளர் பதவி, அமைச்சர் பதவி,சபாநாயகர் பதவி கொடுத்து என்னை அழகு பார்த்தவர். எனது சாயலில் மாமன்னன் இருப்பதாக சொன்னார்கள்.அப்படி என்றால், இது அம்மாவுக்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொல்வேன்’ என்றார் தனபால் பெருமிதமாக.
000