மீண்டும் மதுவால் உயிரிழப்பு… என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது தமிழ்நாடு அரசு – அண்ணாமலை கேள்வி

June 06, 2023

மதுவால் ஏற்படும் தொடர் உயிர் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது அரசு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்..

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனைக்குப் பல உயிர்கள் பலியான சில நாட்களிலேயே, மதுக்கடைகள் திறக்கும் நேரத்திற்கு முன்பே, பாரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுவை அருந்தியதில் இரண்டு பேர் பலியானார்கள். சயனைட் கலந்திருந்த மதுவை அருந்தியதால் மரணம் என்று அந்த வழக்கை, அதன் பின்னர் விசாரிக்காமல், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே கைவிட்டுவிட்டது தமிழக அரசு.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் இயங்கி வரும் பார்கள் அனுமதி இன்றி சட்ட விரோதமாக இயங்கி வந்திருக்கின்றன என்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர், மது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி கிடந்த செய்தி வெளிவந்தது. தற்போது மது பாட்டிலுக்குள், பாசி மிதப்பதாகச் செய்தி வெளிவந்துள்ளது. இவற்றை அடுத்து, மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக, மதுரை மாவட்டத்தில், டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கிக் குடித்த இருவர் மயக்கமடைந்து வீழ்ந்த நிலையில், ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்.

தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறந்து வைத்ததின் விளைவாக, மேலும் ஒரு துன்பகரமான நிகழ்வு நேற்று நடந்திருக்கிறது. 16 வயது பள்ளி மாணவி ஒருவர், தந்தையின் குடிப்பழக்கத்தால் வேதனையடைந்து தற்கொலை செய்துள்ளார். ஆனால், இவற்றைப் பற்றிக் கவலையில்லாத திமுக, மது ஆலைகள் நடத்தும் தங்கள் கட்சிக்காரர்களும், சாராய அமைச்சரும் சம்பாதிக்க, ஏழை எளிய மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாத திமுக அரசு, தற்போது அரசு மதுக் கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர்ப் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப் போகிறது?” என்று குறிப்பிட்டுள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *