ஏப்ரல்.27
திருவாரூரில் அமைக்கப்பட்டுவரும் கலைஞர் கோட்டம், கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனை ஆகியவற்றின் திறப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
சென்னை கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே, திமுகவின் மறைந்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திமுகவின் முக்கிய திட்டங்களான இவற்றின் திறப்பு விழாவிற்கு, குடியரசுத் தலைவரை அழைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு முறைப்படி அழைப்புவிடுக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்படுகிறார். விழுப்புரம் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை சென்னை திரும்பும் முதலமைச்சர், உடனடியாக இரவு 8.30 மணிக்கு டெல்லிக்கு விமானம் மூலம் புறப்படுகிறார்.
நாளை காலை 11 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகைக்குச் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கிறார்.
இந்த சந்திப்பின் போது, ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகள் தொடர்பாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்வது, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது, மதம் மாறிய பட்டியலினத்தவருக்கு இடஒதுக்கீடு அளிப்பது உள்ளிட்டவை குறித்தும் குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது. இந்த சந்திப்பைத் தொடர்ந்து, நாளை இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்ப திட்டமிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோரையும் சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.