மே.2
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி வருகிற 7-ந் தேதியுடன் 2-ம் ஆண்டை நிறைவு செய்து 3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில், முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், தமிழக அரசியல் சூழல் மற்றும் மக்கள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அதேநேரம், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரஇருப்பதால் அதற்கேற்ப பணியாற்றும் வகையில், அமைச்சரவையில் புதிதாக சிலருக்கு பதவி வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தற்போதுள்ள ஒரு சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றம் செய்யப்பட வாய்ப்பள்ளதாகவும், இவை குறித்து இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தி.மு.க. அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனின் இலாகா கடந்த ஆண்டு மார்ச் மாதம் பறிக்கப்பட்டு அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இலாகா வழங்கப்பட்டது. அந்த துறையில் அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 14-ந் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதோடு, 10 அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.