மே.30
ஐப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அந்நாட்டைச் சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.819 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
சென்னையில் வரும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.அதன்படி, கடந்த 23-ந் தேதியன்று சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது ஜப்பானில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 29-ந் தேதி டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் 200 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் முக்கிய நிறுவனங்களின் தலைவர்களுடனான மதிய உணவு சந்திப்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்று உரையாற்றினார். அதையடுத்து, நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த 6 தொழில் நிறுவனங்களுடன் ரூ.819 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, மற்றும் கியோகுட்டோ சாட்ராக், மிட்சுபா இந்தியா, ஷிமிசு, பாலிஹோஸ் உள்ளிட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.