பாரதீய ஜனதா கட்சி முன் வைக்கும் விமர்சனங்கள் அனைத்துக்கும் உடனுக்கு உடன் பதில் சொல்லும் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்வதில்லை என்று வலைதளங்களில் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.
மத்திய உள்துறை அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னணி தலைவருமான அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழ் நாட்டுக்கு வந்திருந்த போது சென்னை மற்றும் வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பேசினார்
அப்போது அவர், பிரதமா் மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டு ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு செய்து உள்ள திட்டங்களைப் பட்டியலிட்டார். மேலும் நாடளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெறுவதற்கு இலக்கு வைத்து செயல்படுமாறு கட்சி நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை பாஜக சார்பில் பிரதமர் பதயில் அமர்த்தும் காலம் வரும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு மேட்டூர் அணையை திறந்து வைத்த பிறகு பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின், “அப்படியானால் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழிசை சவுந்தர்ராஜன், எல். முருகன் போன்றவர்களை பிரதமர் பதவியில் அமர்த்தினால் திமுக வரவேற்கும்” என்று கூறினார்.
அதே வேளையில் காங்கிரசும் திமுகவும் வாரிசு அரசியலை நடத்துகின்றன என்று அமித்ஷா கூறியதற்கு மு.க.ஸ்டாலின் நேரடியாக பதில் சொல்ல மறுப்பதாக வளைதளங்களில் கருத்து பகிரப்பட்டு வருகிறது.