நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காட்டிற்கு வந்த பிரதமர் நரேந்திரமோடி, ஆஸ்கார் நாயகர்களான பொம்மன், பெள்ளி தம்பதியரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து, 50-வது ஆண்டு பொன்விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி மைசூருக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று காலை பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு சென்ற பிரதமர் மோடி வனப்பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரம் ஜீப்பில் சவாரி சென்று வனவிலங்களை பார்வையிட்டார். இதை தொடர்ந்து புலிகள் காப்பகத்தின் 50-வது ஆண்டு பொன் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
வாகன சவாரியை முடித்து கொண்ட பின்னர் சுமார் 10.20 மணிக்கு கக்கநல்லா சோதனை சாவடி வழியாக சாலை மார்க்கமாக முதுமலை தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமை பிரதமர் மோடி பார்வையிட்டார். அங்கு பெண் யானைக்கு கரும்பு அளித்த அவர், மூத்த யானை பாகன்களான கிருமாறன், தேவராஜ், குள்ளன் ஆகியோரிடம் காட்டு யானைகளை பிடிப்பது குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து, முதுமலையில் T23 புலியை உயிருடன் பிடிக்க உதவியாக இருந்த முதுமலையை சேர்ந்த மீன்காளன், மாதன் உள்ளிட்ட 3 பழங்குடியின வனதுறை ஊழியர்களையும் அவர் சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து, ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்’ ஆவண படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினரையும், ரகு, பொம்மி யானை குட்டிகளையும் சந்தித்து பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், முதுமலை தெப்பகாட்டில் இருந்து சாலை மார்கமாக மசினகுடி வந்த அவர், பஜார் பகுதியில் கூடியிருந்த கட்சி தொண்டர்களை பார்த்தவுடன் காரில் இருந்து கீழே இறங்கி கைகளை அசைத்து உற்சாகபடுத்தினார்.
அதேபோல ஹெலிகாப்டர் தளத்தில் கூடியிருந்த பொதுமக்களின் அருகே நடந்து சென்ற மோடி, அவர்களைப் பார்த்து கைகளை அசைத்தார். பின்னர் அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மைசூர் புறப்பட்டு சென்றார்.