மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் இப்போதே வரிந்து கட்டி. விட்டன.

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சி தலைவர்கள் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினர். 26 கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.

பெங்களூர் கூட்டம் முடிந்த சில மணி நேர்த்தில் டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அசோகா ஓட்டலில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் இருந்து  அதிமுக, பாமக, தமாகா, புதிய தமிழகம், ஐஜேகே , புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, ஆந்திராவின் ஜனசேனா கட்சிதலைவரான நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்டோரும் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விரிவாக விவாதிக்கப்பட்டது. தேர்தல் நெருக்கத்தில் கூட்டணியை விரிவு படுத்துவது குறித்தும் கூட்டத்தில்  ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

இந்த  கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.  பிரதமர்  மோடிக்கு அருகில் பழனிசாமி அமர வைக்கப்பட்டார்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள பாஜக கூட்டணி சார்பில் கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 பிராந்தியங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

தெற்கு பிராந்தியத்தில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா, அந்தமான்-நிகோபார், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. தெற்கு பிராந்திய பிரதிநிதியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

அதாவது  மோடியின் தென் பிராந்திய தளபதி.

மோடி அசோகா ஓட்டலுக்கு வந்தபோது,அவருக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுடன்  சேர்ந்து  பூங்கொத்து அளிக்கும் அளவுக்கு பெருமை படுத்தப்பட்டார் ஈபிஎஸ்.

ஏன் இந்த முக்கியத்துவம் என்றால் வாக்கு சதவிகித கணக்குப்படி பார்த்தால் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது அதிமுகதான்.

000