ஆகஸ்டு,11-
ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் அவருடைய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து நகரங்களிலும் ஒரே நேரத்தில் வெளியான ஜெயிலர் படத்தைப் பார்க்க அனைத்து திரை அரங்குகளிலும் கூட்டத்திற்கு குறைவில்லை.
மதுரையில் மட்டும் 28 தியேட்டர்களில் ஜெயிலர் ரிலீஸ் ஆகி உள்ளது. அனைத்து தியேட்டர்களிலும் ரஜினி ரசிகர்கள் அதிகாலை முதலே ஆர்வத்துடன் குவிந்தனர். முதல் காட்சியை காண ரசிகர்கள் சிலர் சிறைக் கைதி போன்று உடையணிந்து வந்து பரபரப்பு ஏற்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து தியேட்டர் வாசலில் இனிமேல் மது அருந்த மாட்டோம் என்று உறுதிமொழியையும் எடுத்தனர். ரஜினியின் கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.. ஜெயிலர் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் சென்னை சத்யம் திரையரங்கில் படம் பார்த்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.
ஜெயிலர் படம் பார்ப்பதற்காக ஜப்பான் நாட்டின் ஒசாகா பகுதியைச் சேர்ந்த ரஜினி ரசிகரான யாசூடா ஹிதோஷி, தனது மனையுடன் சென்னைக்கு வந்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில்;ஜெயிலர் படத்தை இருவரும் பார்த்து ரசித்தனர். படம் முடிந்து வெளியில் வந்த யாசூடா ஹிதோஷி, ’ரஜினி படத்தை பார்ப்பதற்காகவே மனைவியுடன் சென்னை வந்ததாகவும், முத்து படத்தில் இருந்தே தான் ரஜினி ரசிகராக
ஆகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
நாகர்கோவிலில், ஜெயிலர் படம் பார்த்த சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன்,’ கல், மண், காதல் இருக்கும் வரை என்னைக்கும் சூப்பர் ஸ்டார்தான் நம்பர் ஒன்’’ என்று நெகிழ்ந்தார்.
நடிகர் ஷாருக்கான் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் ஜெயிலர்திரைப்படம் பார்ப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு,’’கண்டிப்பாக பார்ப்பேன்.. ஐ லவ் ரஜினி சார்.. அவர்
மாஸ்! அவர் ஜவான் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து எங்களை
ஆசிர்வதித்தார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயிலர், ரஜினி படத்தில் ஒரு மைல் கல்.
000