ஜூன்.1
சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணங்களை முடித்துக்கொண்டு, நேற்றிரவு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமானநிலையத்தில் திமுகவினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசு முறைப் பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, அவர் நேற்றிரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், “உங்கள் வாழ்த்துகளோடு நான் மேற்கொண்ட சிங்கப்பூர் – ஜப்பான் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. தமிழ்நாட்டிற்கும் ஜப்பானுக்கும், கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்லுறவை பெறக்கூடிய வகையில் இந்தப் பயணம் அமைந்தது.
இந்த சுற்றுப்பயணத்தின்போது சிங்கப்பூரைத் தொடர்ந்து, பல ஜப்பான் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தி, 3,233 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. அதன்படி, ‘ஹை-பி நிறுவனம் – 312 கோடி ரூபாய், டைசெல் நிறுவனம் – 83 கோடி ரூபாய், கியோகுட்டோ நிறுவனம் – 113.9 கோடி ரூபாய், மிட்சுபா இந்தியா – 155 கோடி ரூபாய், பாலிஹோஸ் டோஃபில் – 150 கோடி ரூபாய், பாலிஹோஸ் கோஹ்யேய் – 200 கோடி ரூபாய், பாலிஹோஸ் சட்டோ-ஷோஜி – 200 கோடி ரூபாய், ஓம்ரான் ஹெல்த்கேர் – 128 கோடி ரூபாய் என ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதன் மூலமாக, நேரடியாகவும் மறைமுகமாகவும் 5000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.