தமிழ்நாடு என்றவுடன் அதன் கலாச்சார விழுமியங்கள் எப்படி நினைவுக்கு வருகிறதோ, அதே போல நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, அபரிவிதமாய் வளர்ச்சி காண்கிறது என்பதனையும் எவராலும் எளிதில் மறுத்துவிட முடியாது. தலைநகர் சென்னை தொடங்கி, ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்கிலும் வளர்ச்சி என்பது வரலாறு பதித்து வருகிறது.
அந்த வகையில், ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமும், 270 பேருந்துகளையும், 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்ட சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் , மக்கள் தொகையால் நிரம்பி வழிய, மாற்று ஏற்பாடாக தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முடிவுபெறும் தருவாயில் உள்ளது. சுமார் 14 ஏக்கரில் கட்டப்படும் இப் பேருந்து நிலையத்தில் , ஒரே நேரத்தில் 130 அரசுப் பேருந்துகள், 85 தனியார் தனியார் பேருந்துகள் நிறுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்படியான பேருந்து நிலையம் இன்னும் ஒரு சில மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது …..
இதுப்போக கோயில் நகரமும், சங்கம் வைத்து தமிழ்வளர்த்த இடமுமான மதுரையில், ரூ.8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டமும், தொழில் நகரமான கோவையில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டமும், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் செயல்பாட்டிற்கு வரவுள்ளன.
இவை போக சென்னையிலும், 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கோவை, விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புதிய சிப்காட் வளாகங்கள் என இன்னும் ஏராளமான திட்டங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் வலுப்பெற்றால், தொழில் வளர்ச்சி பெறும், நாட்டின் பொருளாதாரம் உயரும், பொருளாதாரம் உயர்ந்தால் தனி மனித வாழ்வாதாரம் வளர்ச்சி அடையும்… இப்படி தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் நாளுக்கு நாள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இனி வரும் காலங்களில் தமிழ் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள், பிற மாநிலங்களுக்கு சவாலாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை….