ராஜஸ்தானில் போர் விமான வீட்டின் மீது விழுந்ததில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகி உள்ளனர்.
சூரத்கர் விமானத் தளத்தில் இருந்து வழக்கமான பயிற்சிக்காக இந்தியன் ஏர் ஃபோர்ஸ் MiG-21 ரக போர் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில மணி நேரங்களில் போர் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. அதனை சரிய செய்ய முயன்றார் விமானி. ஆனால் எந்த முயற்சியும் கை கொடுக்கவில்லை. இதனை அறிந்த விமானி எமர்ஜன்ஸி வழியாக சரியான நேரத்தில் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்தார்.இதனால் அவர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் ராஜஸ்தானின் பஹ்லோல் நகரின் ஹனுமன்கர் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது.
ரத்தி ராம் என்பவரின் வீட்டின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த வீடு முற்றிலும் சேதமடைந்தது. வீட்டில் இருந்த ரத்தின் ராமின் மனைவி உட்பட 3 பெண்கள் அப்பாவி பெண்கள் லியாயினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். போர் விமானம் பலத்த சத்தத்துடன் விழுந்து நொறுங்கியதால் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பதறியப்படி அங்கு திரண்டனர். அவர்கள் எரிந்து கொண்டிருந்த விமானத்தின் பாகங்களை தண்ணீர் மற்றும் மணலை கொண்டு அணைக்க முயன்றனர். மேலும் விபத்து குறித்து கேள்வி பட்டதும் போலீசாரும் மீட்பு படையினரும் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானத்தின் சிதறிய பாகங்கள் அப்புறப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது.
விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து கண்டறிய விரிவான விசாரணை நடத்த விமானப் படை உத்தரவு பிறப்பித்துள்ளது. விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஒரு நபர், பாராட்டில் இருந்து ஒருவர் கிழே குதித்ததாகவும், அவர் குதித்த சில நொடிகளில் பயங்கர சத்தத்துடன் விமானம் ரத்தி ராம் வீட்டின் மீது விழுந்ததாகவும் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் சுகோய் Su-30 மற்றும் மிராஜ் 2000 ஆகிய இரண்டு போர் விமானங்கள் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. ஒரு விமானம் மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் விழுந்து நொறுங்கியது. மற்றொன்று ராஜஸ்தானின் பரத்பூரில் 100 கிமீ தொலைவில் விழுந்தது. இந்த விபத்தில் ஒரு விமானி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.