June 01, 2023
விசாரணை விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று பாலியல் புகார் விவகாரம் குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தனது கருத்தை தெரிவித்துள்ளது.
மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து மல்யுத்த வீரர்கள் நடத்தும் போராட்டம் தொடர்பாக முதல்முறையாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பல மாதங்களாக நடந்துவரும் போராட்டத்தின் ஒருபகுதியாக, 2021ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் 2016 ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் நாட்டுக்காக தாங்கள் வென்ற பதக்கங்களை வீசப் போவதாக கூறி நேற்று மாலை அங்கு குழுமியதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த விவசாய சங்க தலைவர் நரேஷ் திகாய்த் வீரர்களிடம் சமாதானமாக பேசி அவர்களிடம் இருந்து பதக்கங்களை பெற்றுக்கொண்டு 5 நாட்கள் அவகாசம் வேண்டினார். அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் இருந்து புறப்பட்டனர்.
இதற்கிடையே, இந்த சலசலப்பிற்கு சில மணிநேரத்திற்குப் பிறகு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுவிட்சர்லாந்தின் லாசேன்னைச் சேர்ந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடந்த ஞாயிறு அன்று விளையாட்டு வீரர்கள் தரக்குறைவாக நடத்தப்பட்டு பல மணி நேரம் காவலில் வைக்கப்பட்டது மிகவும் கவலையளிப்பதாக கூறினார்.
மேலும், இந்த விவகாரம் முழுவதும் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு முறையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்; இதில் விசாரணை விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்றும் சமரசமின்றி நிலையான குற்றவியல் விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் பாலியல் புகார் விவகாரம் குறித்து ஒலிம்பிக் கமிட்டி தனது கருத்தை தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி, இதுவரை மௌனம் காத்துவந்த பிடி உஷா தலைமையிலான ஐஓஏவை விளையாட்டு வீரர்களைப் பாதுகாக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐஓசி வலியுறுத்தியது.
இரண்டு எஃப்ஐஆர்களை எதிர்கொண்டுள்ள ப்ரிஜ் பூஷண் சரண் சிங்கின் பெயரை அந்த அறிக்கை குறிப்பிடவில்லை என்றாலும், ஐஓசி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், ‘கடந்த ஞாயிறு அன்று இந்திய மல்யுத்த விளையாட்டு வீரர்கள் காவல்துறையால் மிகவும் மோசமான முறையில் நடத்தப்பட்டது கவலையளிக்கிறது. மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகள் சட்டத்திற்கு இணங்க நிலையான குற்றவியல் விசாரணையின் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்’ என்று ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கும் போது வளாகம் நோக்கி அணிவகுப்பு நடத்தியதையடுத்து, மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் போலீஸாரால் இழுத்துச் செல்லப்பட்டு பல மணி நேர காவலுக்குப் பின்னர் டெல்லி காவல்துறை அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, மல்யுத்த வீரர்கள் நேற்று தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீசி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து விவசாய சங்க தலைவர் தலையீட்டுக்குப் பின் அந்த முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.