May 16,2023
ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடேவுக்கு எதிராக இன்று சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளதோடு, வருகிற மே 18ஆம் தேதி இது தொடர்பான அறிக்கையை பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ல் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் சிலரும் அப்போது கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சில வாரங்கள் சிறையில் இருந்த பின்னரே ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கிலிருந்த அவரை விடுவித்தனர்.
இருப்பினும், விசாரணை சமயத்திலேயே இந்த வழக்கில் ஆர்யன் கானை மட்டும் விடுவிக்க ஷாருக் கானிடம் NCB அதிகாரிகள் ரூபாய் 25 கோடி பேரம் பேசியதாகத் தகவல் வெளியானதை தொடர்ந்து, மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட சமீர் வான்கடே பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகத்துக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு சமீர் வான்கடேவுக்கு எதிராக சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செய்ததோடு, சமீர் வான்கடே உட்பட 4 அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் ரெய்டும் நடத்தினர். பின்னர் சி.பி.ஐ அதிகாரிகள் பதிவுசெய்திருக்கும் முதல் தகவல் அறிக்கையின்படி, ஆர்யன் கான் வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருந்த கே.பி.கோசாவி என்பவர் சமீர் வான்கடே சார்பாக ஷாருக்கானை மிரட்டி ரூ.25 கோடி வாங்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
மேலும் இதற்காகத்தான் கே.பி.கோசாவி ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்ட போது அவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு செல்ஃபீ புகைப்படத்தை எடுத்து அவர் வைரலாகியதாகவும், இந்த விவகாரத்தில் சமீர் வான்கடே மட்டுமல்லாது, NCBயின் கண்காணிப்பாளர் வி.வி சிங் மற்றும் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் அப்போதைய புலனாய்வு அதிகாரியாக இருந்த ஆஷிஷ் ரஞ்சன் மற்றும் கே.பி.கோசாவியின் கூட்டாளி டிசோசா ஆகியோரும் இணைந்துதான் இந்த பேரத்தில் ஈடுபட்டத்தாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், இன்று ஆர்யன் கான் போதைப்பொருள் பறிமுதல் வழக்கில், சமீர் வான்கடேவுக்கு எதிராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளதோடு, வருகிற மே 18ஆம் தேதி இது தொடர்பான அறிக்கையை பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மிரட்டி பணம் பறித்தல் புகார்களை விசாரிக்கும் பொருட்டு சிபிஐ அதிகாரிகள் சமீர் வான்கடேவின் மொபைல் போனை கைப்பற்றினர். தொடர்ந்து நிபுணர்கள் குழு தொலைபேசி தரவுகளை ஆய்வு செய்து வருவதோடு, வான்கடேவின் அழைப்பு விவர பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக செப்டம்பர் 2021 முதல் நவம்பர் 2021 வரையிலான மூன்று மாத காலகட்டத்தில் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்கள் மூலம் வரும் தொலைபேசி அழைப்புகள் ,மின்னஞ்சல்கள், எஸ்எம்எஸ் மற்றும் குரல் குறிப்புகளும் தற்போது சரிபார்க்கப்படுகின்றன. மேலும் நீக்கப்பட்ட தரவு ஏதேனும் இருந்தால் அவற்றை மீட்டெடுக்க அதிகாரிகள் வான்கடேவின் மொபைல் ஃபோனை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப உள்ளனர்.